search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவனந்தபுரம் விவசாயிகள் பலி"

    கேரளாவில் கோடை வெயில் காலம் தொடங்கும் முன்பே 2 விவசாயிகள் அடுத்தடுத்து இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கோடை காலம் தொடங்கும் முன்பு நாடு முழுவதும் வெயில் கொளுத்துகிறது.

    தென்மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் வெயில் சுட்டெரிக்கிறது. திருவனந்தபுரம், வெள்ளறடை, நெய்யாற்றின் கரை, பாலராமபுரம் பகுதிகளில் அனல் காற்று வீசுகிறது.

    பகல் நேரங்களில் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் வாட்டுகிறது.

    கேரளாவில் உஷ்ணத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் வெள்ளறடை பகுதியில் சுலு (வயது 44) என்ற விவசாயி வயலில் களை பறிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

    திடீரென அவர், வயலுக்குள் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உஷ்ணத்தின் தாக்கத்தால் சுலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபோல திருவனந்தபுரம் மணக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கப்பன் (65) என்பவரும் வயலில் வேலை செய்தபோது சுருண்டு விழுந்து இறந்தார்.

    வெயிலின் தாக்கத்தால் இவரும் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கேரளாவில் கோடை வெயில் காலம் தொடங்கும் முன்பே 2 விவசாயிகள் அடுத்தடுத்து இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் எர்ணாகுளம், திருச்சூர், கோட்டயம், கோழிக்கோடு பகுதிகளில் இனிவரும் நாட்களில் தற்போது அடிக்கும் வெயிலை காட்டிலும் கூடுதலாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உஷ்ணம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள், குழந்தைகள், பெண்கள் வெயிலில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
    ×